• Feb 12, 2021
துயர் துடைக்கும் உன் பெயர் தானே , என் உயர் வேதம்
அன்பே
அதிக முறை உன் பெயரை உச்சரிப்பதில்லை,
அத்தனை வார்த்தைகளும் திரும்ப,திரும்ப
தித்திக்கும் போது திகட்டுகிறதே என்பதற்காக;
அன்பே
மை ஊற்றும் பேனா இருந்தும் ,
மயில் இறகால் தான் உன் பெயர் எழுதுகிறேன்.
பேனா முள் கூட உனை குத்தி விட கூடாது என்பதற்காக;
அன்பே
செய்தி தாளும் படிக்க முடியாத,
கைதி ஆகிவிட்டேன் ;உன்
பெயரை கண்டால் ,மனம் மறுபக்கம்
போக மறுக்கிறதே, என்பதற்காக;
அன்பே
மொட்டாக இருந்தாலும் உன் பெயர் சொன்னால்
சட்டென்று பூக்கும் சங்கதி என்ன ? பெண்ணே !
அன்பே
எதிர் வீட்டு குழந்தை என்னிடம் வருவதே இல்லை
எத்தனை முறைதான்
சிறு இனிப்பிற்காக,நூறு முறை உன் பெயர் சொல்லும்
கிளிக்கும் புளித்து போனதோ,
சலித்து கொள்கிறதே உன் பெயர் சொல்ல !
உன் பெயர்
அந்தி சந்திரனை வரவைக்கும்
மந்திர சொல்லோ , உன்
தந்தை தேடி சூடி வைத்த
தந்திர சொல்லோ ;
உன் பெயர்
தூக்கம் வரவைக்கும் சுக நாதமா !
தூக்கம் கெடவைக்கும் சுப்ர பாதமா !
உன் பெயர்
உலக வரைபடமா ,கலக திரைப்படமா,
எனை விட்டு
விலக நேர்ந்தால் ,என் உயிர் விடுமா?
கூந்தலுக்கே மணம் இல்லை எனும் போது ,
வார்த்தைக்கு வாசனை உண்டென்றால் நம்புவார்களா என்ன ?
உன் பெயரை தானடி சொல்கிறேன்;
உன் பெயர்
சுடும் வெயிலா ? கடும் பனியா ?
உன் பெயரின் குளிர்ச்சியினால்
உடலே உறைந்து போகிறது
அப்புறம் எப்படி
நான் ரத்தத்தில் உன் பெயர் எழுதுவது ?
இப்படிக்கு
உன் காதல் ……