அன்பு கூடியது அப்பா
சிந்தை நிறைந்துள்ள
விந்தை மனிதராய் வாழும்
தந்தை பற்றிச் சொல்ல
ஒரு குழந்தை மனதுடன் எழுதுகிற கவிதை இது
என் நினைவு தெரிந்து பார்த்த திரு முகம்
என் அன்னை செய்து வைத்த முதல் அறிமுகம்
நீ தந்தை மட்டுமல்ல.. தந்திரக்காரன்
அன்பைப் பெருக்கும் வித்தை அறிந்தவன்
நீ அன்பு கூட்டிய தருணங்களை
அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆனால் அதை எழுத நினைத்தால் வார்த்தைகள் நீளமாகும்
முழுதாய் முடிக்கவே, எனக்கு பலகாலம் ஆகும்.
படிக்க முடியாத கவிதை அல்ல நீ
படைக்க முடியாத கவிதை நீ
ஓலி எழுப்பும் பொம்மை ஒன்று,
கிலுகிலுக்கும் மணி என்று,
நீ வாங்கி தந்த போது அன்பு கூடியது அப்பா
தோன்றிய போதெல்லாம் தோளில் தூக்கி வைத்து,
ஊன்றி நான் நடக்க ஊந்து வண்டி,
நீ வாங்கி தந்த போது அன்பு கூடியது அப்பா
வேலை செல்லும் முன்னே வாரி அள்ளிக் கொண்ட போது
மாலை பொழுதெல்லாம் என் மழலையில் மகிழ்ந்திருந்த போது
அன்பு கூடியது அப்பா
பல் அறிவு நல்வகையில் தந்துவிட
கல்விக்கூடங்களில் கால்கடுக்க
வேள்வி தீயாக வெய்யிலில் காத்திருந்து
கேள்வி ஞானம் எனக்களித்தபோது
அன்பு கூடியது அப்பா
இடையிலே தட்டி இரு சக்கர வாகனம் ஓட்ட வைத்து
கடையிலே திட்டிக்கொண்டே கேட்ட பொருளெல்லாம் வாங்கி தந்து
நடக்கையிலே என் இடதுகை இறுகப்
பிடித்துக்கொண்டு சென்ற போதெல்லாம்
அன்பு கூடியது அப்பா
தெருவிலே விளையாடத் தென்னை மட்டை செய்து தந்து
திருவிழா கொண்டாட்டத்தில் தித்திப்புக்களை ஊட்டிவிட்டு
என் உருவத்தை வளர்த்த போது
அன்பு கூடியது அப்பா
விடிவதற்குள் விரைவாக எழுந்து, எனை எழுப்பி
முடிந்த வரை படியென்று, தேநீர் போட்டு கொஞ்சம் சிந்தி
படிந்த கறை வேட்டி காணும் போது
அன்பு கூடியது அப்பா
தோல்விகள் என்னை தாக்கிய போது
தோள் தட்டிக்கொடுத்து ஒரு
தோழனாய் தத்துவங்கள் சொன்ன போது
அன்பு கூடியது அப்பா
சிறிய என் வெற்றிகளையும் கூட,
பெரிதாகப் பாராட்டிய உன் அரிதான மனதை கண்ட போது
அன்பு கூடியது அப்பா
உலக சந்தை போய் தேடினாலும்,
உன்னை மகிழ்விக்கும் பரிசு கிடைக்காது, தந்தையே
மரியாதை மதிப்பு மட்டுமே; நான் தரும் சிறந்த
சரியான பரிசாக இருக்கும் உனக்கு தந்தையே
தந்தையெனும் சொல் தமிழ் இலக்கணத்தில் தகரம்
தமிழ் சொல்லிக் கொடுத்த நீ எனக்கு நம்பிக்கையின் சிகரம்
தப்பாய் வளர்த்திடாமல் தடுத்தாண்ட அப்பா
உப்பாய் துவர்த்திடாமல் உறவுகொண்ட அப்பா
செப்புசிலையாய் இல்லாமல் நட்பாய் பழகிய அப்பா
எப் “பா” வகை ஆனாலும்
அப்பா வகை தான் சிறந்ததது
எனக்கு பெருமைதான், அவருக்கு மகனாக பிறந்தது.
எது வேண்டும் ? என்ன வேண்டும் ? என்று கேட்கும் போதெல்லாம்
“எனக்கெதுக்குடா” என்ற வார்த்தை நீ கூறும் போது,
அன்பு கூடியது அப்பா
Comments